6. “கைசிக பண்” இசைத்தலும் ஸத்யசோதனையும்

Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 6

“மஞ்சனம் அழகிய நம்பி! – தனை
வழுத்துவோர் வாழ்வித்த நம்பி! – வண்மை
அழகிய நம்பி! வடிவழகிய நம்பியே!
நஞ்செனக் கிடந்தோன் பழிதீர்த்தருள்
நாளும் புதியதோர் நம்பி! -நலமிகு
செங்கனி வாயுடை நம்பி!
நாத விநோதனனே சரணம்.”

“மகாமஞ்சோலையிலும் வானளந்த மணிக்கோபுரமும்
கோவில் எங்கும் பாடும் குருகேசா – வாக்குவளைச்
சக்கரமும் சங்கும் தனுவாள் கதையுடனே
பக்கம் நின்று காத்தருள்வாய்.”

என்று பல பாமாலைகளை நம் சன்னதி முன்பு வந்து பாடி மனமுருகி ப்ராத்திக்கொண்டு,

பகவானே! எனக்கு சுமையாக இருக்கும் இந்த சரீரம் (உடல்) இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகிறது. இந்த மாய உலகிலிருந்து வெளியேறப் போகிறேன். உம்மிடமிருந்து விடை பெறுகிறேன் என்று ப்ரார்த்தனை செய்து விட்டு, மீண்டும் ப்ரம்ம ராக்ஷஸன் இருக்கும் இடம் நோக்கி விரைந்து செல்ல ஆரம்பித்தான்.

நம்பாடுவான் வந்த வேகத்தை காட்டிலும் இரு மடங்கு வேகமாக ப்ரம்ம ராக்ஷஸன் இருக்கும் இடம் நோக்கி விரைந்து செல்ல துவங்கினான். “உயிரினும் மேலானது ஸத்யம்! உயிரை காப்பாற்றிக் கொள்வதை விட, ஸத்யத்தை காப்பாற்றுவதே தனது கடமை” என்ற அவனது எண்ணம் அவனது வேகமான நடையில் தெரிந்தது.

அப்பொழுது அங்கு வந்த ஒரு பெரியவர்,

நீ சிறிது நேரம் முன்பு வேகமாக கோவிலை நோக்கி வருவதை பார்த்தேன், ஆனால் இப்போதோ அதை விட வேகமாக செல்கிறாயே! நீ எங்கே போகிறாய்! என்னிடம் உண்மையை சொல், என்று வினவினார் பெரியவர்.

ப்ரம்ம ராக்ஷஸனுக்கும் தனக்கும் நடந்த விஷயங்களை கூறிவிட்டு தனது ஸத்யத்தை காப்பாற்றுவதற்காக விரைகிறேன் என்று பெரியவருக்கு பதிலுரைத்தார்.

பெரியவர் நம்பாடுவானுக்கு அறிவுரை ஆரம்பித்தார்,

“விபீஷணன் ராக்ஷஸன்! ஆனால் நல்ல குணங்களை கொண்டவன், அவனைப் போன்ற ராக்ஷஸர்களிடம் பழகலாம். ஆனால் இந்த ராக்ஷஸன் அப்படிப்பட்டவன் அல்ல, உன்னை கண்டிப்பாக புசித்து விடுவான்” என்று அப்பெரியவர் ஸத்யத்தை கைவிட்டாலும் சத்ய தோஷம் இல்லை என்று எடுத்துரைத்தார்

அதற்கு நம்பாடுவான், ஸத்யத்தை காட்டிலும் உயிர் பெரிதல், நான் ஸத்யப்படி வாழ்பவன் என்றான்.

சரி, போய் வா! உனக்கு ப்ரம்ம ராக்ஷஸனால் எந்த ஆபத்தும் ஏற்படாதிருக்க உன்னை ஆசிர்வதிக்கிறேன். உனக்கு மங்களம் உண்டாகும் என்று வழியனுப்பி வைத்தார்.

மிக ஆர்வமாக இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூதேவி நாச்சியாரிடம்,

நம்பாடுவானை வழி மறித்து கேள்வி கேட்ட பெரியவர் வேறு யாருமல்ல‌. அது நானே! நம்பாடுவான் எந்தளவு ஸத்யத்தை காப்பாற்றுவான் என்று சோதித்து பார்த்தேன். அந்த சோதனையில் நம்பாடுவான் வெற்றி பெற்றான்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதை அறிய ஆர்வத்துடன் பூதேவி தாயார் காத்திருந்தார்.