5. பதினெட்டு பாவங்கள்

Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 5

1. ஏதேனும் ஸத்யம் செய்து விட்டு, அதை செய்யாமல் அலட்சியமாக இருப்பவன்,

2. காம உணர்வுகளை கட்டுப்படுத்தாமல், பர ஸ்த்ரீயுடன் (விலை மாதருடன் தொடர்பு  கொள்பவன்),

3. சாப்பிடும் போது அருகில் உள்ளவர்களுக்கு கொடுக்காமல் சாப்பிடுபவன்,

4. ப்ராமணனுக்கு‌ பூமி தானம் செய்து விட்டு, மீண்டும் அவனிடமிருந்து அந்த பூமியை அபகரிப்பவன்,

5. அழகான இளம் பெண்ணை சிறு வயதில் ஆசை காட்டி மோசம் செய்து விட்டு, பிறகு கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுபவன்.

6. அமாவாசை தர்ப்பணம் செய்து விட்டு, அன்றைய தினம் ஸ்த்ரீ கமனம்,(பெண்ணுடன் உறவு கொள்பவன்)

7. ஒருவன் தரும் சாப்பாட்டை சாப்பிட்டு, பிறகு நன்றி கெட்டு அவனை அவதூறு பேசுபவன்,

8. ஒருவனுக்கு தன் பெண்ணை கல்யாணம் செய்து தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, பிறகு அவனை ஏமாற்றுபவன்,

9. ஷஷ்டி, அஷ்டமி, சதுர்தஸி மற்றும் அமாவாசை திதிகளில் குளிக்காமல் சாப்பிடுகிறவன்,

10.ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுப்பதாக சொல்லி, பிறகு அதை கொடுக்காமலிருப்பவன்,

11.உயிர் நண்பனின் மனைவியை மயக்கி அவளை தனதாக்கி கொள்பவன்,

12. தனது ஆசார்யன் மனைவி மற்றும் தன்னை ஆளும் அரசனின் மனைவி, இவர்களிடம் தகாத உறவு கொள்பவன்,

13. இரண்டு திருமணம் செய்து கொண்டு, இருவரிடத்திலும் சமமான அன்பு செலுத்தாதவன்,

14.தன்னையே கதி என்று வாழும் கற்பில் சிறந்த தன் மனைவியை சிறு வயதிலேயே துரத்தி விடுபவன்,

15. தாகத்துடன் வேகமாக தண்ணீர் குடிக்க வரும் பசுக்களை தண்ணீர் குடிக்க விடாமல் விரட்டுபவன்,

16. ப்ரம்மஹத்தி பாவங்கள் பண்ணுபவன், குடிகாரன், தங்கம் திருடுபவன், ஒரு வ்ரதம் இருந்து அதை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே விடுபவன், இப்படிப்பட்ட நபர்கள்,

17. பக்தர்களுக்கு எளிமையான, அனைத்து இடங்களிலும் இருக்கும் வாஸூதேவனான ஸ்ரீமன் நாராயணனை பூஜை செய்யாமல், மற்ற தேவதைகளை பூஜை செய்பவன்,

18. மற்றும் அனைவருக்கும் முக்தியை கொடுக்க கூடிய ஒரே இறைவனான ஸ்ரீமன் நாராயணனையும் மற்ற தேவதைகளையும் சமமாக நினைப்பவன்.

இவர்கள் அனைவருக்கும் என்ன தண்டனை கிடைக்குமோ,  அந்த தண்டனையை, அந்த பாவச்செயல்களின் பலனை, நான் வாக்கு கொடுத்தபடி இங்கு திரும்பி வராவிட்டால் நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கு மேல் நான் என்ன உறுதி கொடுக்க முடியும் ? என்னை நம்பி இப்போது அனுப்பி வை என்று நம்பாடுவான் மன்றாடினான்.

நம்பாடுவானே! உன்னுடைய ஸத்யத்தை நான் நம்புகிறேன். இப்போது நீ சென்று, பகவானை துதித்து சேவித்து விட்டு விரைவில் திரும்பி வா.

நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவில் நோக்கி பக்தியுடனும், நேரம் ஆகிவிட்டது என்ற பதட்டத்துடனும் விரைந்து செல்ல ஆரம்பித்தான்.