4. நம்பாடுவானிடம் தர்க்கம் செய்யும் ராக்ஷஸன்

Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 4

தன்னை புசிக்கப்போவதாக ப்ரம்ம ராக்ஷஸன் சொல்லியும், துளியும் உயிர் பயம் இல்லாமல், என் மீது உள்ள பக்தி மற்றும் நம்பிக்கையினால் நம்பாடுவான் தைரியமாக பதில் சொன்னான்.

ப்ரம்ம ராக்ஷஸனே! உனக்கு நான் ஆகாரமாகிறேன். நாம் இருவரும் ப்ரம்மா எழுதி வைத்த விதிப்படி நடப்போம்.ஆனால் ஒரு வேண்டுகோள்!

கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி சுபதினமாதலால் “ஜாக்ர வ்ரதம்” என்று ஒரு விரதம் அனுஷ்டித்து என் சரீரம் எல்லாம் இரக்தமாம்சங்கள் இன்றியே எலும்பும் தோலுமாக நின்றது. இப்போது நான் ஸ்வாமி அழகிய நம்பியைச் ஸேவித்து விட்டு உன்னிடத்தில் வந்து ஆகாரமாகிறேன், இப்போது எனக்கு வழி விடு என்றான் நம்பாடுவான்.

ப்ரம்ம ராக்ஷஸன் தனக்கே உரித்தான குரலில், தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் யாராவது அந்த இடத்திற்கு மீண்டும் வருவார்களா? என்னிடமிருந்து தப்பிப்பதற்காக நீ அஸத்யமான வார்த்தைகளை சொல்கிறாய், நீ இப்போது சென்றால் திரும்பி வர மாட்டாய்! என்றான்.

நம்பாடுவான் பணிவோடு, ப்ரம்ம‌‌ ராக்ஷஸனே! நான் பகவானின் பக்தன் பொய் உரைக்கமாட்டேன். இந்த உலகமே ஸத்யம் என்ற தர்மம் இருப்பதனால் தான் இயங்கி வருகிறது. பகவானும் ஸத்ய ஸ்வரூபி! அதனால் கொடுத்த ஸத்யத்தை மீற மாட்டேன். இந்த உலகில் பதினெட்டு விதமான கடும் பாவங்கள் உள்ளது. உனக்கு கொடுத்த ஸத்யத்தை நான் மீறி, இங்கு வராது போனால், அந்த 18 பாவங்கள் செய்த தண்டனைக்கு நான் உரியவனாவேன்.

இதற்கு மேலும் என் மீது நம்பிக்கை இல்லையா என்று நம்பாடுவான் கேட்க, ப்ரம்ம ராக்ஷஸன் சிறிது நேரம் யோசித்தான், என்று வராஹ பகவான் சொல்லி முடிப்பதற்குள், பூதேவி நாச்சியார் குறுக்கிட்டாள்.

ஸ்வாமி! நம்பாடுவான் சொன்ன அந்த 18 கடும் பாவங்கள் என்னென்ன? அதை கேட்டு ப்ரம்ம ராக்ஷஸனே அமைதியாக யோசித்தான் என்றால் அந்த கடும் விளைவை ஏற்படுத்தும் பாவங்கள் என்னவென்று நம்பாடுவான் கூறியதை எடுத்துரையுங்கள் என்றார்.