3. ப்ரஹ்மராக்ஷஸன் வருகை

Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 3

இப்படியாக பத்து வருடங்களாக பாடிக் கொண்டிருந்தான் நம்பாடுவான். ஒரு வருடம் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில், வழக்கம் போல ஊரார் உறங்கிய பிறகு, கையில் வீணையை எடுத்துக் கொண்டு தன் இல்லத்திலிருந்து புறப்பட்டான் நம்பாடுவான். எங்கும் காரிருள்! மிதமான நிலவொளி! இதில் வேக வேகமாக நம் சன்னதி நோக்கி வந்து கொண்டிருந்தான் நம்பாடுவான். அப்பொழுது ஒரு கரிய உருவம் தான் செல்லும் பாதையில் நிற்பது போல அவனுக்கு தோன்றியது. அது யார்? இந்த வேளையில் நிற்பது என்று யோசித்துக் கொண்டே அந்த உருவத்தினை நெருங்கி கொண்டிருந்தான் நம்பாடுவான்.

வராஹ பகவான் தொடர்ந்தார்,

தேவி! நம் பக்தன் நம்பாடுவான் அந்த கருப்பு உருவத்தின் அருகில் சென்றவுடன், அங்கு ஒரு ப்ரம்ம ராக்ஷஸன் நின்று கொண்டிருப்பதை பார்த்தான்.

ப்ரம்மராக்ஷஸனை பார்த்த நம்பாடுவான்,

ஏய் கரிய உருவத்தில் நிற்பவனே ! நீ யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் “சிற்றஞ்சிறுகாலே வந்து உன்னை சேவித்து” என்று முன்னோர்கள் சொன்ன படி இந்த அதிகாலையில், ஸர்வேஸ்வரனான பகவான் சன்னதி முன்பு பாடல் பாட சென்று கொண்டிருக்கிறேன் எனக்கு வழி விடு என்று பயமில்லாமல் சொல்ல,

ப்ரம்ம ராட்சசன் நம்பாடுவானை முறைத்து பார்த்து கொண்டேயிருந்தான்.

உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என் வழியில் குறுக்கிடுகிறாய்? வாய் திறந்து பதில் சொல் என்று நம்பாடுவான் மீண்டும் கேட்க,

நான் பத்து நாட்களாக மிகவும் பசியோடு இருக்கிறேன். அதனால் ஆகாரமாக யாராவது கிடைப்பார்களா என்று அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். எனக்கு சரியான மனித மாமிசம் இன்று கிடைத்திருக்கிறது. என் மீது கருணை கொண்டு இறைவன் உன்னை இன்று அனுப்பி வைத்துள்ளான். அதனால் உன்னை நான் போக அனுமதிக்க மாட்டேன். உன் உடல் பாகங்களை தனித் தனியே பிரித்து, உன் உடலின் சதைகளையும் ரத்தத்தையும் எனது முன்னோர்களுக்கு படைத்து விட்டு, என் பசியையும் தீர்த்துக் கொள்ள போகிறேன் என்று ப்ரம்ம ராட்சசன் கர்ஜித்தான்.