Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 1
அழகிய மாலை நேரம், மெல்லிய காற்று, இதமான மந்தமான வெயில் என அருமையான சூழலில், வராஹ பகவான் மற்றும் பூதேவி நாச்சியார் ஸம்பாஷணம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஸ்வாமி! தங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா! என்று பூதேவி நாச்சியார் கேட்க, பகவான் புன்னகைக்க, பூதேவி நாச்சியார் அதையே சம்மதமாக கொண்டு பேச ஆரம்பித்தாள்.
ஸ்வாமி! உலகத்தையே ரக்ஷிக்கிறீர்கள், கோடானு கோடி பக்தர்களை அனுதினமும் பார்க்கிறீர்கள், இதில் உங்கள் மனம் கவர்ந்த பக்தன் என்று யாராவது உண்டோ? அனைவரையும் கருணையால் ரக்ஷிப்பது என்பது வேறு. ஆனால் நீங்களே வியக்கும் படி உங்கள் மனதை கொள்ளை கொண்ட பக்தர் ஒருவராவது உண்டோ? என்று பூதேவி நாச்சியார் வினவினார்! ஆம்! ஒருவன் இருந்தான், அவனுடைய திருநாமம் மாதங்கன். இப்போது அவன் நமது பெரிய வீடு என்ற பரமபதத்தில் உள்ளான் என்று வராஹ பகவான் சொல்ல,
பூதேவி நாச்சியார் ஆச்சர்யமடைந்தாள் !
ஸ்வாமி! நான் பொழுது போக்கிற்காக கேட்ட வினாவுக்கு உண்மையான பதில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஸ்வாமி! அந்த பக்தன் யார், தேவ கணமா? மனிதனா? ரிஷியா? யார் அது? அதைப் பற்றிய விஷயங்களை தெரிய நான் மிகவும் ஆவலாக உள்ளேன் ஸ்வாமி என்றார் பூதேவி நாச்சியார்.
தேவி! நம் இருவரைப் பற்றியும் பல பாடல்கள் இயற்றி, நமது லீலைகள் பற்றி விரிவாக பாடி, பாடல்கள் மூலம் பக்தி செலுத்தி வந்த தாழ்ந்த குலத்தில் பிறந்தவன்.
அவனது பாட்டின் ஒவ்வொரு எழுத்துகளுக்கும் புண்ணிய பலன்களை கணக்கிட்டு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஸ்வர்க்க லோகத்தில் இருக்க வேண்டும் என்று நான் தீர்மானித்து அவனை ஸ்வர்க்க லோகத்திற்கு அனுப்பி வைத்தேன்.
ஸ்வர்க்க லோகத்தில் உள்ளவர்கள் புண்ணியம் செய்து அங்கு வருவதால் மிகுந்த வசீகரிக்கும் அழகுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களே ஆச்சரியப்படும்படி, நமது பக்தன் முகத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் இந்த அளவு ஒளி வீசும் முகம் அமையும் படி என்ன புண்ணியம் செய்து வந்திருக்கிறான் இந்த மானிடன் என்று திகைத்து நின்றனர்.
தேவி! ஸ்வர்க்க லோகத்தில் இருந்தவர்கள் அங்குள்ள சுகங்களை அனுபவித்து கொண்டிருக்க, நமது பக்தன் அங்கும் நமக்கு ஆராதனம் பண்ணுவது, நம்மைப் பற்றி பாடுவது என்று நம்மையே நினைத்திருந்தான். அது மட்டுமல்லாமல் அங்குள்ள அனைவரையும் நம்மை குறித்து பாடல்கள் பாடச் செய்தான்.
ஸ்வர்க்க லோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்காமல் நம் சிந்தனையாகவே இருந்த இவனை, ஸ்வர்க்க லோக தலைவனான இந்திரன் வந்து நமஸ்கரித்து நின்றான்.
இதையெல்லாம் அறிந்த நான், இவனுக்கு ஸ்வர்க்க லோகம் சரி வராது என்று முடிவு செய்து, நம் பெரிய வீடான பரமபதத்திற்கு அழைத்துக் கொண்டேன். அங்கு, நல் வகையால் நமோ நாராணா என்று தொழுதேத்தும் நம் பக்தர்களோடு சேர்ந்து நமக்கு பல்லாண்டு பாடிக் கொண்டிருக்கிறான் என்று வராஹ பகவான் சொல்லி முடித்தார்.
ஸ்வாமி! இந்த பக்தன் யார்? பூவுலகில் எந்த ஊரில் வாழ்ந்து தங்களை துதித்து பல்லாண்டு பாடினான்? பாசுரங்களால் தங்கள் மனதை மயக்கிய ஆழ்வார்களுக்கு பிறகு, வேதங்களோ அல்லது ரிஷிகளோ, அல்லது புராணங்களோ சொல்லாமல், நீங்களே தங்கள் திருவாயால் சொல்லும் படியான, அந்த பக்தன் யார் ? தங்கள் மனதில் அவன் எவ்வாறு இடம் பிடித்தான் ? இந்த விபரங்களை எனக்கு விபரமாக தெரிவியுங்கள் ஸ்வாமி!