முன் “ஏற்றம்” தரும் மஹேந்திரகிரி மலை
மேற்கு தொடர்ச்சி மலை என்பது சித்தர்கள் வாழும் பகுதி என்பதை பலரும் அறிவார்கள். குறிப்பாக, பொதிகை மலை என்பது தமிழ் மொழி உருவான மலையாகவும், அகத்தியர் வாழும் ஆன்மிக மலையாகவும், அத்ரி முனிவர் வாழும் மலையை கொண்டதாகவும் உள்ளது. குற்றால மலையில் சித்தர்கள் தவம் செய்த பல குகைகளும் அமைந்துள்ளன. அந்த வரிசை யில் பல
பெருமைகள் கொண்ட மகேந்திரகிரி மலையை பற்றியும் அந்த மலையில் குடிகொண்டிருக்கும் ஐந்து நம்பிகளில் கடைக்குட்டியாக திகழும் “திருமலைநம்பி” பெருமாளை தரிசிக்க நாம் ஆயத்தமாகிறோம்.
திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும்’ என்பார்கள். திருப்பதிக்கு ஏழு ஏற்றம் இருப்பது போலவே, திருமலை நம்பி கோவிலுக்கு செல்லவும் ஏழு ஏற்றம் இருக்கிறது. எனவே நம்பியை நம்பி மலை மீது ஏறினால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நல்வழி கிடைக்கும்.
இங்கு இருக்கும் மலைநம்பி கோவிலுக்கு நாம் ஜீப்பில் தான் செல்லவேண்டும். நடந்து செல்வதாக இருந்தால் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அங்கிருந்து செல்லலாம்.இயற்கையோடு இணைந்த இரம்மியமான மலை தொடர்களையும், நம்பி ஆற்றின் சாரல் அழகையும், பறவைகளின் கூக்குரலையும், இராம தூதன் ஹனுமானின் விளையாட்டையும், ஹனுமான் இலங்கையை கடக்க உதவி புரிந்த இந்த மஹேந்திரகிரி மலையில் நம் பாதம் தொட்டு நடக்கும் போது நம் உடல், மனம் அனைத்தும் திருமலை நம்பி பெருமாளை நினைத்து மனம் குதுக்களிக்கும்.
திருக்குறுங்குடி பெரிய கோவிலில் உள்ள மூன்று நம்பிகள், குறுங்குடி வல்லி நாச்சியார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியார்கள், பக்கம் நின்றார் என்றழைக்கப்படும் சிவன் சந்நிதி, காலபைரவர் சந்நிதி ஆகியோரை தரிசித்து விட்டு அங்கிருந்து நாம் 1 கி.மீ தொலைவில் உள்ள திருப்பாற்கடல் நம்பி என்று அழைக்கப்படும் நான்காவது நம்பி “க்ஷீரம்” நதிக்கரையில் அமைந்துள்ள பெருமாளை தரிசித்து விட்டு அங்கிருந்து மலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள “உச்சிமாகாளி அம்மன் கோவிலை அடையலாம். அங்கு தான் பங்குனி மாதம் நடைபெறும் ப்ரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் ஐந்து கருட வாஹனத்தில் ஐந்து நம்பிகளும் ஒன்றாக அந்த இடத்தில் தான் மலை மேல் வாழும் முனிவர்கள் ,சித்தர்கள், அனைவருக்கும் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.
பெரும்பாலும் மலைக் கோவில்கள், சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். அதுபோலவே மகேந்திரகிரி மலையும் மிகவும் சிறப்புக்குரியது. அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு நித்யவாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
குலம் காக்கும் பெரியகுளம்
அங்கிருந்து நாம் கடந்து செல்லும் போது இந்த ஊரின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும் “பெரியகுளம்” நம் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். இந்த குளத்தின் நீருக்கு ஆதாரமாக மலைமேல் இருக்கும் அருவி அமைந்துள்ளது.
இந்த குளத்தில் இருந்து தான் ஊரை சுற்றியுள்ள வயல்கள், வாழைமரங்கள், போன்ற அணைத்து விவசாய நிலங்களுக்கும் தேவையான தண்ணீர் செல்கிறது. இந்த குளத்தின் அழகை இரசித்துக் கொண்டு செல்லும்போது அந்த குளக்கரையை சுற்றியுள்ள பனைமரங்களை காணலாம். அந்த மரங்கள் தான் இந்த ஊரின் ஸ்தல வ்ருக்ஷம் ஆகும்.
அந்த குளக்கரையை கடந்து நாம் சிறிது தொலைவு சென்றவுடன் மலைநம்பி கோவிலுக்கு செல்லும் வனப்பகுதியை அடையலாம். இந்த வனப்பகுதி புலிகள் காப்பகம் பகுதி என்பதாலும் வனவிலங்குகள் இங்கு அதிகம் வசிப்பதாலும் இந்தப்பகுதி களக்காடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வனத்துறையிடம் அனுமதி பெற்று தான் மலைக்கு மேலே செல்ல வேண்டும்.
வனப்பகுதியை அடைந்ததும் அருவியில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் ஓவென்று நம் காதுகளில் விழுந்து நம்மை பரவசப்படுத்தும். மேலும் பறவைகளின் சப்தங்கள், அங்கிருக்கும் குரங்குகளின் விளையாட்டுகளை நாம் இரசித்து கொண்டு சென்றால் ஒரு சிறிய பாலத்தை கடந்து வனப்பகுதிக்கு செல்ல ஆயத்தமாவோம். பொதுவாகவே நாம் வனப்பகுதிகளில் செல்லும்போது நம் கவலைகள் மறந்து மனம் லேசாகிவிடும். அப்படிதான் இந்த வனப்பகுதிகளில் செல்லும்போது மனம் இலகுவாகி திருமலைநம்பியை நினைத்து ப்ராத்தித்துக் கொண்டு செல்வோம். திருக்குறுங்குடியில் அமைந்திருக்கும் இந்த மலை 1645.2மீ (5398 Ft) உயரம் கொண்டது. மேலும் பல கொண்டல் வளைவுகளையும் கொண்டது. பல மூலிகைகளையும் தன்னிடத்திலே கொண்டுள்ளது. அப்படி அற்புதமான இந்த மலையின் அழகையும், இயற்கை எழில்சூழ்ந்த சுத்தமான ஆறுகளின் ரம்மியமான ஓட்டத்தை இரசித்துக் கொண்டும், மூலிகை மரங்களில் இருந்து வரும் சுத்தமான காற்றை ஸ்வாசித்துக்கொண்டே சென்றால் கோவிலை அடையலாம்.
காவல் தெய்வம் சங்கிலி பூதத்தார்
மலைமேல் நடுக்காட்டுக்குள் வீற்றிருக்கும் நம்பியைத் தரிசிக்க வரும் பக்தர்களையும், கோவிலையும் காவல் தெய்வமாக இருந்து காக்கிறார் சங்கிலிபூதத்தார். கருடசேவை நடைபெறும் போது சாமியாடும் சங்கிலிபூதத்தாரின் பக்தர்கள், தங்களை சங்கிலியால் உடலில் அடித்துக் கொள்வது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
இந்தக் கோவிலுக்கு முன்பு பாலத்திற்கு அடியே இரு பெரிய பாறைகளுக்கு நடுவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கின் வழியாக நம்பியாறு சீறி பாய்ந்து ஓடி வருகிறது. சங்கிலிபூதத்தாருக்கு சாமி ஆடும் பக்தர்கள், இரும்பு சங்கிலியை ஆற்றுக்குள் போட்டு விடுவார்கள். மறு ஆண்டு விழா நடைபெறும் போதுதான், இந்தச் சங்கிலி எடுக்கப்படும்.
நோய்தீர்க்கும் நம்பியாறு
ஆலய பகுதியில் பாய்ந்தோடும் நம்பியாறு மிகவும் புனிதமானதாக சொல்லப்படுகிறது. நம்பியாறு, ‘மகேந்திரகிரி’ என்ற மலையில் உற்பத்தியாகி வருகிறது. இந்த நதி, மாயவன் பரப்பு என்ற இடத்தில் ஐந்து சுனைகளாக தோன்றுகிறது. பின் கடையார் பள்ளம் வழியாக தாய்பாதம் தொட்டு, நம்பி கோவில் வந்து சேருகிறது. பல வகை மூலிகைகளின் வாசத்தினைத் தன் வசம் சேர்த்து, நோய் தீர்க்கும் தீர்த்தமாகவும் இது விளங்குகிறது. கோவிலுக்கும், இறைவனின் திருமஞ்சனத்திற்கு தேவையான நீரை இந்நதி தருவதால், ஆற்றில் நீராடும் பக்தர்கள் எண்ணெய் மற்றும் சோப்பு பயன்படுத்தக்கூடாது என்ற தடை உள்ளது.
திருப்பம் தரும் திருமலைநம்பி
நம்பியைத் தரிசிக்கும் முன்பு நம்பி ஆற்றில் நீராட வேண்டும். அதன் பின் திருமலை நம்பி கோவிலுக்குள் சென்று நின்ற கோலத்தில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்க வேண்டும். கோவிலின் உள்ளே சென்று திருமலைநம்பியை தரிசிக்கும் வேளையில் நாம் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு மலையேறி வந்த அத்தனை களைப்பும் நீங்கி மனம் ஒன்றுபட்டு “ஓம் நமோ நாராயணா” என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே பெருமாளின் திருவுருவத்தை தரிசிக்கலாம்.
திருமலைநம்பி இங்கு ” சங்கு சக்ர கதாபானே துவாரஹா நிலயாச்சுத” என்ற ஸ்லோகத்திற்க்கிணங்க பெருமாள் சங்கு, சக்ர, கதையுடன், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத காட்சியளிக்கிறார். மேலும் சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் விதமாக நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். இங்கு வீற்றிருக்கும் உற்சவர் வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே கீழே இருக்கும் கோவிலுக்கு எழுந்தருள்வார். ஒன்று தை மாதம் நடக்கும் தெப்போத்ஸவத்திற்கு மற்றொன்று பங்குனி மாதம் நடக்கும் ப்ரம்மோத்ஸவத்திற்கு எழுந்தருளி தன்னுடைய அண்ணன்மார்கள் நால்வருடன் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிக்கிறார்.
புரட்டாசி மாதம்
திருமலை நம்பியை தரிசிப்பது எப்படி?