16. ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதி

Thirukkurungudi Stalapuranam – Part 16

ஸ்ரீ மணவாளமாமுனிகள் திருக்குருகூரில் இருந்து ஸ்ரீ வைஷ்ணவநம்பி மங்களாசாஸனத்திற்கு வாமனகுடியான திருக்குறுங்குடிக்கு 18-வது பட்டம் ஸ்ரீ நரசிம்ஹ யோகி ஸ்வாமி கொல்லம் ஆண்டு 616-ல் காலத்தில் எழுந்தருளி மங்களாசாஸனம் செய்து கொண்டு சிலகாலம் க்ரந்த காலக்ஷேபங்கள் ஸேவித்துக் கொண்டு எழுந்தருளியிருந்தார்.

அந்த சமயத்தில் திருவேங்கடதாஸர் என்பவரை 19-வது பட்டத்துக்கு க்ருபை பண்ணியிருந்தார். ஸ்ரீ திருவேங்கடதாஸர் ஸ்ரீ விஷ்ணு சித்த ஸ்வாமி என்ற திருநாமத்திலே கொல்லம் ஆண்டு 637-ல் அலங்கரித்து ஸ்ரீ ஸ்வாமி நம்பி ஸந்நிதியில் திருப்பணிகள் செய்யும்படி நியமனம் செய்துவிட்டு ஸ்வாமி மணவாளமாமுனிகள் நாச்சியார் திருமாளிகைக்கு எழுந்தருளினார்.

மணவாளமாமுனிகள் ஸந்நிதியை நோக்கி நாம் செல்லும் போது இரண்டு பக்கமும் நரஸிம்மர் சிற்பங்கள் மிகவும் கம்பீரமாக நம்மை வரவேற்கும். வலது பக்கத்தில் உள்ள நரசிம்மர் தமது இடது தொடையில் லக்ஷ்மியை இருத்திக் கொண்டு லக்ஷ்மிநரசிம்மராகவும் வலது பக்கத்தில் இருக்கும் நரசிம்மர் இரணியனை வதம் செய்வது போலவும் மிகவும் தத்ரூபமாகவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

திவ்ய தேசங்களிலும் மற்ற எல்லா ஊர்களிலும் ஆஸ்ரம ஸ்வீகாரம் செய்து கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள் விஷயத்திலும் துரதிஷ்ட வசமாக ஏதாவது தவறுகள் நடந்துவிட்டால் அந்த ஸ்தானத்தை மறுபடியும் அலங்கரிக்க எழுந்தருள்பவர்கள் பரமாசார்யாரின் பூர்ண கடாக்ஷம் பெற்றவரும், தேவாதிதேவனான பேரருளாளனிடம் ஆஸ்ரமஸ்வீகாரம் பெற்றுக் கொண்ட ஸ்வாமி எம்பெருமானார் பக்கல் ஆஸ்ரம ஸ்வீகாரம், பஞ்சஸம்காரம் பெற்றவரும் ஸ்ரீ மணவாளமாமுனிகள் பூர்ண கடாக்ஷம் பெற்ற ஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் பரம்பரையில் ஆஸ்ரமஸ்வீகாரம் வகையற பெற்றுக் கொண்டு ஸ்தானத்துக்கு எழுந்தருள்வது தொன்றுதொட்டு வழக்கம்.