09. நாதவினோத மணி இசையில் லயிக்கும் “நம்பி”

Thirukkurungudi Stalapuranam – Part 9

நாதவினோத “மணி” இசை

நாம் கோவிலின் துவஜஸ்தம்பத்தை கடந்து குலசேகர மண்டபத்தை அடையும் பொழுது அங்கு மிக பெரிய மணி கட்டப்பட்டிருக்கும். பெருமாளின் பூஜை நேரங்களில் மற்றும் புறப்பாடு நேரங்களில் இம்மணி இசைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஒரு இசை பிரியர், இசையை கேட்டு மகிழ்வதில் வல்லவர், நம்பாடுவனின் வீணை இசைக்கும் அழகை ரசிப்பதற்காகவே துவஜஸ்தம்பத்தை சற்று நகர்த்தி வைத்திருக்கிறார் என்று நாம் முன்னர் பார்த்தோம். இங்கு பெருமாளுடைய குணம் “ருசி ஜனக வல்ப லாவண்யம்”.

கேரள தேசத்து மன்னனான ஆதித்திய வர்மனால் கி.பி 1468-ம் ஆண்டு இந்த பெரிய மணியை திருக்கோவிலுக்காக சமர்ப்பித்தார். மேலும் இந்த கோவிலில் ஒவ்வொரு உற்சவத்திலும் அரையர் ஸேவை என்று அழைக்கப்படும் அரையரின் இசையில் பெருமாளின் நிகழ்வுகள் நடக்கின்றன என்று நாம் பார்த்தோம்.
அப்பேர்ப்பட்ட அரையர்களின் தாளத்தை எல்லாம் சேர்த்து மணியாக கட்டி துவாரபாலகரின் பின்னால் மாட்டியிருப்பதால் நம் கண்களுக்கு தெரியாது. அர்ச்சகர்களிடம் விண்ணப்பித்து மணி ஸேவையை பெறலாம். இதற்கு “நாதவினோத மணி” என்று பெயர். ஒரு குழந்தை சாப்பிடுவதற்கு எப்படி தன் தாயிடம் முரண்டு பிடிக்கும் பொழுது அவள் பாட்டு பாடி, கதை சொல்லி சாப்பிட வைப்பாளோ, அதை போல இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு இந்த மணியை இசைத்து திரு அமுது சமர்ப்பித்தால் தான் ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம்.

கருடன்

இந்த கோவிலில் இருக்கும் கருடன் மற்ற கோவில்களில் இருக்கும் கருடனை விட கொஞ்சம் மாறுபட்டவர். மற்ற எல்லா கோவில்களிலும் கருடர் கருப்பு நிறத்தில் கற்சிலையில் பெருமாளுக்கு எதிரே வீற்றிருப்பார். ஆனால் இந்த கோவிலில் பல வண்ணங்களில் இருப்பார். மேலும் இந்த கோவிலில் வருடத்திற்கு 5 நாட்களில் கருட ஸேவை நடைபெறும்.

  1. ஆடி ஸ்வாதி கருட ஸேவை

பெருமாளின் திருநக்ஷ்த்திரம் மற்றும் கோவில் வைபவங்கள் அன்று கருட ஸேவை நடைபெறுவது இயல்பு. ஆனால் தன்னுடைய சேவகனான பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடனின் திருநக்ஷத்திரம் (ஆடி ஸ்வாதி) அன்று பெருமாள் கருட வாஹனத்தில் ஸேவை தருவது மிகவும் சிறப்பு. அப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த கருட ஸேவை ஆடி ஸ்வாதி அன்று மிக சிறப்பான முறையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது.

2. ஆவணி ஸ்வாதி கருட ஸேவை

1981-ம் வருஷம் துர்மதி ஆண்டு 1157- ஆவணி மாதம் 19-ம் நாள் வெள்ளிக்கிழமை (04-09-1981) அன்று 48-ம் பட்டம் கலியன் ராமாநுஜஸ்வாமி வர்த்தமான ஜீயர் ஸ்வாமி அவர்களின் நியமனப்படி ஸ்ரீ ஸ்வாமி நம்பி மூலவர், வீற்றிருந்த நம்பி, பள்ளிக்கொண்ட நம்பி, ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் முதலானவர்களுக்கு அஷ்ட பந்தன ஜீர்ணோத்தாரண விமான ஸம்ப்ரோக்ஷ்ணம் லோகோத்தரமாக நடைபெற்றது. அக்கும் புலியும் அதளும் உடையால் அவர் ஒருவர் பக்கம் நிற்க நின்றபண்பர் என்ற பக்கம் நின்றார் காலபைரவர்களுக்கும் அஷ்ட பந்தன விமான ஸம்ப்ரோக்ஷ்ணம் அதே தினத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி ஸ்வாதி அன்று கருட சேவை நடைபெறுகிறது.

3. கார்த்திகை மாதம் கைசிக துவாதசி கருட ஸேவை

கார்த்திகை மாதத்தில் கைசிக ஏகாதசி மிகச்சிறப்பாக திருக்குறுங்குடி கோவிலில் நடைபெறும் என்பதை நாம் கைசிக ஏகாதசி மஹாத்மியம் என்ற பகுதியில் விரிவாக காணலாம். இங்கு பாணர் குலத்தில் பிறந்த நம்பாடுவான் கோவிலில் வந்து பெருமாளை பாடியதால் அடுத்த நாள் துவாதசி அன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று மாலை கருட ஸேவையில் பெருமாள் வீதி உலா நடைபெறும் .

4. தை மிருகஷீரிஷம் கருட ஸேவை

இங்கு 45-வது பட்டம் ஸ்ரீ ராமானுஜ ஸ்வாமி 1065-ம் ஆண்டு மாசி மாதத்தில் ஆஸ்ரம ஸ்வீகாரம் பெற்று ஸ்தானத்துக்கு எழுந்தருளினார். அவருடைய காலத்தில் ஸ்ரீ ஸ்வாமி ஸன்னதியில் கைசிக மண்டபம், கோபுர வாசல் கதவுகள் திருப்பணி, எல்லாம் முதன்முதலில் நடைபெற்று தை மிருகசீரிஷம் அன்று அஷ்ட பந்தன ஜீர்ணோத்தாரண விமான ஸம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்றது. இந்த ஸம்ப்ரோக்ஷ்ணம் அன்று மாலை கருட சேவை நடைபெற்றது. ஆகையால் ஒவ்வொரு ஆண்டும் தை மிருகசீரிஷம் அன்று கருட சேவை நடைபெறும்.

5. பங்குனி மாதம் பிரமோற்ஸவத்தில் 5-ம் திருநாள் அன்று ஐந்து நம்பி கருட ஸேவை

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரம் அன்று இங்கு கொடியேற்றத்துடன் உத்சவம் ஆரம்பித்து 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் 5-ம் நாள் 5 நம்பிகளுக்கும் கருட ஸேவை நடைபெறும். இரவு 9 மணிக்கு 5 நம்பிகளும் 5 கருட வாஹனத்தில் கோவில் படி இறங்கி நான்கு மாடவீதி, நான்கு ரதவீதிகளும் பவனி வருவார்கள். இதில் நாம் ஏற்கனவே பார்த்தது போல் உச்சிமாகாளி அம்மன் கோவிலில் இருக்கும் இடத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை தொடரில் உள்ள மஹேந்திரகிரி மலையில் வாழும் முனிவர்கள், ரிஷிகள், கந்தர்வர்களுக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம். அனைத்து வீதிகளையும் பவனி உலா முடிந்ததும் அடுத்த நாள் காலை சன்னதி தெருவில் அனைத்து நம்பிகளும் ஒன்றாக எழுந்தருளியபின் ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளி பெருமாளை தெண்டசமர்பித்தவுடன் அனைத்து நம்பிகளும் கோவிலுக்கு எழுந்தருள்வார்கள். இந்த ஐந்து நம்பி கருட ஸேவையை ஸேவிப்பதற்கு எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திருக்குறுங்குடிக்கு விஜயம் செய்வார்கள். கருட ஸேவை முடிந்தவுடன் பெருமாள் ஏகாந்தமாக வாத்திய மேள தாளங்கள் முழங்க யதாஸ்தானத்திற்கு எழுந்தருள்வார்.

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்

பேயாழ்வார் பாசுரம்

என்ற பேயாழ்வாரின் பாசுரத்திற்கு இணங்க பெருமாளின் திருவுருவத்தையும் சங்கு சக்கரம் ஏந்திய புஜங்களையும், பச்சைமால் மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் என்று அழைக்கக்கூடிய  பெருமாளின் திருமேனியையும் இராமானுஜர் இட்ட திருமண்காப்பையும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பாமரனாய் திகழ்ந்து பெருமாளிடத்தில் கொண்ட அதீத பக்தி காரணமாக வைகுண்ட மோக்ஷம் பெற்ற நம்பாடுவான் என்ற பக்தனுக்கும் அருள் பாலித்த சுந்தர பரிபூரண வடிவழகிய நம்பியின் திருமுகத்தை கண்ணார கண்டு மனதார ப்ராத்தித்து

“நம்பியை தென் குறுங்குடி நின்ற

அச்செம்பொனே திகழும் திரு மூர்த்தியை

உம்பர் வானவர்  ஆதி அம் சோதியை

எம் பிரானை என் சொல்லி மறப்பனோ

நம்மாழ்வார் பாசுரம்

என்று தொடங்கும் நம்மாழ்வாரின் 10 பாசுரங்களை  நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் மூலவர் மற்றும் உத்ஸவர் முன் ஸேவித்துவிட்டு, நமக்கு வலப்பக்கம் இருக்கும் அறையில் ராமர் லக்ஷ்மணர் மற்றும் சீதா தேவியையும் , திருப்பாற்கடல் நம்பி என்று அழைக்கப்படும் நான்காவது நம்பியின் உற்சவ மூர்த்தியையும் தரிசித்துவிட்டு, பிரிய மனம் இல்லாமல் நம் மனம் நம்பியின் திருப்பாதங்களில் சரணாகதி அடையும் நோக்கில் அவனுடைய திருவுருவத்தில் லயித்திருக்கும்.

 மூலவர் பெருமாள் விக்ரஹம் வர்ணகலாபத்தால் ஆனது.

இங்கு நான்கு ஆழ்வார்கள் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார். இங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியே நம்மாழ்வாராக  ஆழ்வார் திருநகரியில்  அவதரித்ததாக கூறப்படுகிறது. திருமங்கையாழ்வார் தன்னுடைய எல்லா ஆயுதங்களையும் இங்கிருக்கும் நம்பியிடம் சமர்ப்பித்து மோக்ஷம் பெற்ற திருத்தலம்.