08. துவஜஸ்தம்பம்

Thirukkurungudi Stalapuranam – Part 8

அங்கிருந்து நாம் பெருமாள் ஸேவிப்பதற்கு செல்லும்முன் துவஜஸ்தம்பம் (கொடிமரம்) சற்று விலகி பெருமாளுடைய கர்ப்பகிருஹம் என்று அழைக்கப்படும் மூலஸ்தானம் நமக்கு காட்சியளிக்கும். எதனால் இந்த கோவிலில் துவஜஸ்தம்பம் விலகி காட்சி அளிக்கிறது என்று பார்த்தால் “முன்னொரு காலத்தில் நம்பாடுவான் என்று ஒரு பக்தன் பெருமாள் மீது பக்தி பாடல்கள் பாடி வந்தான். அவர் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியில் பெருமாள்முன் தன் பக்தி பாடல்களை பாட ( கைசிக பண்) வரும் பொழுது  ப்ரம்ம ராக்ஷஸனின் கோரபிடியில் அகப்பட்டு இருவருக்கும் தர்க்கம் நிகழ்ந்து கடைசியில் பெருமாள் அவர்கள் முன் தோன்றி இருவருக்கும் மோக்ஷம் கிட்ட வழிவகை செய்தார். நம்பாடுவான்  தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் பெருமாள் மீது இருந்த பக்தி மிகுதியால் அவனுடைய பாடல்களை கேட்பதற்க்காகவும் அவன் வீணை மீட்டும் அழகை ரசிப்பதற்காகவும் பெருமாள் இந்த கொடிமரத்தை நகர்த்தி வைத்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் “கைசிக ஏகாதசி “ என்ற நிகழ்வாக நடைபெறுகிறது. அப்பேற்பட்ட உன்னதமான இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தை நாம் தனி பகுதியாக பார்க்கலாம்.

துவஜஸ்தம்பத்தை ஸேவித்துவிட்டு பெருமாள் ஸேவிக்க படியேறும் பொழுது இடதுபக்கத்தில் பெரிய திருவடியான கருடவாஹனம், சிறியதிருவடியான ஹனுமான் வாஹனம் மற்றும் ஐந்து தலை கொண்ட சேஷ வாஹனம் என்று வரிசையாக வீற்றிப்பார்கள்.

இவர்கள் அனைவரையும் தரிசித்துவிட்டு மூலவரை ஸேவிக்க படிகளில் ஏறும் பொழுது பெரிய மணி நம் கண்களில் காட்சியளிக்கும் .இந்த மணி 17-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் ஸமஸ்தானத்தை ஆண்ட ஜெயசிம்ம வம்சத்தை சார்ந்த ஆதித்ய வர்மா என்பவரால் வழங்கப்பட்டது.

இப்படி நாம் கோவிலின் அழகை எல்லாம் ரசித்துவிட்டு ஐந்து வீதிகளை கடந்து ஐந்து பெரிய வாயில்களை கடந்து கடைசியாக நாம் ஆவலுடன் தரிசிக்க வந்த ஸ்ரீ சுந்தர பரிபூரண வடிவழகிய நம்பி சந்நிதியை நெருங்கும்முன் நம் மனம் பக்தி பரவசத்துடன் நம் கால்கள் ஆனந்த நர்த்தனமாட ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் பொழுது 4 ஆழ்வார்கள் மங்களாசாஸனம் அருளிச் செய்த அனைத்து பாசுரங்களும் நம் மனதில் ஓங்காரமிட, நாம் அர்த்த மண்டபத்தை அடைந்து பெருமாளின் திருவுருவத்தை தரிசனம் செய்யலாம்.