14.திருமங்கையாழ்வாருக்கு வைகுண்ட மோக்ஷம் அளித்த பரமபதவாசல்

Thirukkurungudi Stalapuranam – Part 14

சிவபெருமான் ஸந்நிதி மற்றும் பைரவர் இருவரையும் தரிசித்துவிட்டு வடக்கு பக்கமாக இருக்கும் பரமபத வாசலை காணலாம். இங்குள்ள பரமபதவாசல் சிறப்பு வாய்ந்தது. இதைப் பற்றி தெரிய வேண்டுமானால் இந்த மகத்தான திருக்குறுங்குடியில் நம்பியின் திருப்பாதகமலங்களை அடிபணிந்து வேண்டி அவரிடத்தில் பல பாடல்கள் பாடி மோக்ஷம் அடைந்த திருமங்கையாழ்வார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

திருமங்கை மன்னனும் திருவரங்கனின் தந்திரமும்

திருவாலி திருநகரில் பிறந்து, திருமங்கை மன்னனாக ஆட்சி செய்து, திருவரங்கனுக்கு பற்பல திருப்பணி கைங்கர்யங்களான மதில் கைங்கர்யங்கள் உட்பட அனைத்தையும் திடமாக திட்டமிட்டு முடித்து வைப்பதற்கு, திருடனாக மாறி அரங்கனின் கைங்கர்யங்களை முடித்து விட்டு அதன் பிறகு திருத்தி தனக்கு மோக்ஷம் அருள்பாலித்து வேண்டினார். ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் ரெங்கநாதரோ திருமங்கையாழ்வாரிடம் உமக்கு மோக்ஷம் அளிக்கும் அதிகாரம் எமக்கில்லை, தமது தெற்கு வீடான “திருக்குறுங்குடி” எனும் ஸ்தலத்திற்கு சென்று,

அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் அபயம் கேளும் என்று இந்த ஊருக்கு அனுப்பினார். பிறகு திருமங்கையாழ்வாரோ இத்திருத்தலத்திற்கு வந்து ஸ்ரீ அழகிய நம்பியிடம் பல கைங்கர்யங்கள் செய்து அவரிடத்தில் பல பாசுரங்கள் அருளிச்செய்து பெருமாளின் மனம் கவர்ந்து மோக்ஷம் கிடைத்ததாக ஐதீகம்.


அதனால் மற்ற எல்லா ஊர்களிலும் கத்தி, கம்பு, கேடயம், வேல் முதலான ஆயுதங்களுடன் காட்சி அளிக்கும் திருமங்கையாழ்வார் இந்த ஊரில் அபய ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலை ) காட்சி அளிக்கிறார். எனவே தான் இந்த ஊருக்கு கூப்பிடும் தூரத்தில் வைகுந்தம் என்று இன்னொரு பெயரும் உண்டு.

இந்த ஊரில் திருமங்கையாழ்வார் ஸந்நிதி ஊருக்கு வெளியே கழனிகளுக்கு (வயல்களுக்கு) நடுவில் அமைந்துள்ளது.

இங்கு 10 நாட்கள் பகல்பத்து 10 நாட்கள் இராப்பத்து உத்ஸவம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி அன்று ஆரம்பிக்கும் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஒவ்வொரு நாளும் பரமபதவாசல் திறக்கும் பொழுது திருமங்கையாழ்வார் பெருமாளை வழிமறித்து மோக்ஷம் வேண்டும் நிகழ்வு நடைபெறும். மேலும் கடைசி நாளில் சொர்க்கவாசல் கதவடியில் திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்று அர்ச்சகர்களால் கைத்தாங்கலாக பெருமாளின் திருவடியில் திருத்துழாயால் தஞ்சம் புகுவதாக நம்பப்படுகிறது.

கலயாமி கலித்வம்சம் கவிம்லோக திவாகரம்
யஸ்யகோபி ப்ரகாசராபி ஆவித்யாம் நிகதம்தம.
வ்ருச்சிகே க்ருத்திகா ஜாதம் சதுஷ்கவி சிகாமணிம்
ஷட்ப்ரபந்த் க்ருதம் சார்ங்க மூர்த்திம் கலிகமாச்ரயே.

திருமங்கையாழ்வார்