Thirukkurungudi Sthalapuranam – Part 6
திருக்குறுங்குடிக்கு ஸ்ரீராமானுஜர் எழுந்தருளி வீற்றிருக்கும் நம்பிக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்று தாஸ்ய நாமம் ஸமர்ப்பித்தவுடன் தம்முடைய நித்யநைமித்திகோத்ஸவாதிகளையும், ஸ்ரீ பண்டார ஸ்ரீ கார்ய நிர்வாகத்தையும் நடத்தி வருவதற்கு உம் திருக்கையாலே மடம் ஸ்தாபிக்க வேணும் என்று நம்பி ராமாநுஜரிடம் திருவுள்ளம் கொண்டபடியால், கலியுகம் 4195க்கு சரியான கொல்லம் ஆண்டு 268 ஸ்ரீ முகவருஷம் தம்முடைய ஆச்சார்யரான பெரிய நம்பியினுடைய திருவம்ஸத்தில் அவதரித்து தமக்கு அன்பனாய் இருக்கிற “ஸ்ரீ பூர்ணாசார்யரை” அழைத்து த்ரீதண்டகாஷாயதிகள் தரப்பெற்று திருக்குறுங்குடி நம்பிக்கு தம்முள்ளங்கனிந்து சாத்தப்பட்ட திருநாமங்களும் “பேரருளாளன் “ என்ற திருநாமத்தையும், தம்முடைய ஆச்சாரியரான பெரியநம்பியால் தமக்கு சாத்தப்பட்டதான “ராமாநுஜன்” என்ற திருநாமத்தையும்,
துரீயாஸ்ரமத்தின் வாசகமான ஜீயர் என்ற திருநாமத்தையும், தேனும் பாலும் அமிர்தமும் போலச் சேர்த்து “ஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர்” என்ற திருநாமத்தை சாற்றி திருவாராதனத்துக்காக பஞ்சப்போரில் ஒருவரான செல்வநாரணநம்பியையும், “பஸ்யதேவ்யங்குளியகம்” என்ற திருவடியால் அலங்க்ருதமான தம்முடைய திருக்கணையாழியையும் ப்ரஸாதித்து ஸ்ரீ ஸ்வாமி வடிவழகிய நம்பியை மங்களாசாஸனம் செய்தருளினார்.
ராமனுஜரால் நிறுவப்பெற்ற மடம் என்பதால் இந்த மடத்திற்கு பேரருராள ராமானுஜ மடம் என்னும் திருநாமத்தோடு சிறப்புற்று விளங்கி வருகின்றது. இதுவே ஸ்ரீ வைஷ்ணவ சமய மடங்களுள் தொன்மையானது. இம்மடத்தின் அதிபதிகள் ஸ்ரீ நம்பி சந்நிதியின் ஸ்ரீ பண்டார கார்ய நிர்வகித்து நடத்தி வருவதோடு வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தையும் நாட்டில் பரவச் செய்து வருகின்றனர். ஆதலின் இப்மடத்தைச் சார்ந்த சிஷ்யர்கள் பல்லாயிரவர் பல்வேறு இடங்களில் உள்ளனர். அன்று தொட்டு இன்று வரை 49 ஜீயர் ஸ்வாமிகள் இம்மடத்தை நிர்வகித்து ” என் கடன் பணி செய்து கிடப்பது” என்ற நோக்கில் பல்வேறு தொண்டு களை நம்பிக்கு ஆற்றியுள்ளார்கள். இப்போது இந்த மடத்தை 50-வது பட்டமான ஸ்ரீ பேரருளாள இராமானுஜ ஜீயர் அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது