Thirukkurungudi Stalapuranam – Part 13
பொதுவாக வைஷ்ணவ கோவில்களில் சிவன் ஸந்நிதி இருப்பது அரிது. திருக்குறுங்குடி கோவிலில் பெருமாளுக்கு அருகில் சிவபெருமான் “மஹேந்திரகிரி நாதர், பக்கம் நின்றார்” என்ற பெயரில் காட்சி அளிக்கிறார். மஹேந்திரகிரி மலையின் அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளதால் இவருக்கு மஹேந்திரகிரி நாதர் என்று பெயர் வந்தது.
சைவமும் வைணவமும் கைகோர்த்து களி நடனம் புரிகின்ற சைவ,வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கும் ஒப்பற்ற திருக்கோவில்களில் இத்திருக்கோவிலும் ஒன்றாகும்.
சிவபெருமானின் தோஷத்தைப் போக்கிய திருத்தலம்
இங்கு சிவபெருமான் நம்பி ஸந்நிதியின் பக்கத்தில் வீற்றிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
பத்மாசூரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து அவர் மனம் குளிரச்செய்து அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவருடைய தலை சுக்கு நூறாக நொறுங்க வேண்டும் என்ற வரத்தை கேட்டுப் பெற்றார்.
ஆனால் பத்மாசுரனோ வரம் கொடுத்த சிவபெருமான் தலையிலே கை வைக்க நினைத்து கைலாயம் வந்தார். இதனை கண்டு பயந்த சிவபெருமான் திருக்குறுங்குடி பெருமாளிடம் உதவி கேட்டார். அதனால் பெருமாள் மோஹினி அவதாரம் எடுத்து நடனமாடி பத்மாசுரனை அவன் கையாலேயே அவன் தலையில் கை வைத்து சுக்கு நூறாக்கி வதம் செய்தார். அதனால் இங்கு பெருமாள் ஸந்நிதிக்கு பக்கத்தில் சிவபெருமான் பக்கம் நின்றார் கோலத்தில் காட்சி அளிக்கிறார். எனவே இத்திருக்கோவிலில் பகல்பத்து உத்சவத்தில் பெருமாள் மோஹினி அவதாரத்தில் எழுந்தருள்வார். வேறு எந்த கோவிலிலும் பெருமாளுக்கு மோஹினி அவதாரம் கிடையாது.
அக்கும் புலியின் அதளும் உடையார் அவர்ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்ஊர் போலும் தக்க மரத்தின் தாழ்சினைஏறி தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.
திருமங்கையாழ்வார்