Thirukkurungudi Stalapuranam – Part 5
மிகப்பெரிய வாயில்களை உடைய இந்த மண்டபத்தில் உற்சவ காலங்களில் பெருமாள் இங்கு எழுந்தருளி திருமஞ்சனம், திவ்ய பிரபந்த ஸேவாகாலம் (ஆழ்வார்கள் பாசுரம்) போன்ற நித்திய க்ரமங்களும் நடைபெறும். மேலும் உற்சவத்தில் 8-ம் நாள் பெருமாள் பார்வேட்டைக்கு குதிரை வாகனத்தில் செல்லும் போது மழைக்காக ஒதுங்கி தாமதமாக கோவிலுக்கு எழுந்தருள்வதை கண்டு தாயார் கோபித்துக்கொள்ள, தாயாரின் கோபத்தை தணிக்க அன்று பெருமாள் பல்லக்கு தாங்கும் ஸ்ரீபாத தாங்கிகள், அர்ச்சகர்கள், பலவேலை செய்யும் சேவகர்கள் என அனைவருக்கும் “தாசி” என்று அழைக்கப்படும் பெருமாளின் அடியார்களின் மிகவும் முக்கியமான ஒருவரால் மட்டையடி வழங்கப்படும். எனவே தான் இந்த மண்டபத்திற்கு “மட்டையடி மண்டபம்” என்று அழைக்கப்படுகிறது..
திருக்குறுங்குடியில் அரையர் சேவை முதலில் நாதமுனியால் அறிமுகப்படுத்தப்பட்டது. நாதமுனியின் வழித்தோன்றல்களான அரையர்கள், அரையர் சேவையைச் வழிநடத்தி வருகின்றனர். மேலும் தாயாரின் கோபத்தை தணிக்க,பெருமாளின் சமாதானத்தை இசை வடிவில் தாயாருக்கு தெரியப்படுத்துவர். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோயில்களில் தனித்துவமான இசை சங்கீதத்தை நிகழ்த்தும் உரிமையை அரையர்களுக்கு வழங்கியதாக நம்பப்படுகிறது, மேலும் அவர்களுக்கு சங்கு போன்ற சிவப்பு தொப்பி, இரண்டு சங்குகள் மற்றும் புனித மாலை ஆகியவற்றை வழங்கினார்.
இந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூண்களிலும் அரிய வகை சிற்பங்கள்,சிற்பக்கலைஞர்களால் செதுக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் ரசித்துக்கொண்டு செல்லும் பொழுது ஸ்ரீ பேரருளாள் இராமானுஜ ஜீயர் மடம் நம் கண்முன்னே காட்சி அளிக்கும்.
இப்பொழுது இந்த மடத்தை 50வது பட்டமான ஸ்ரீ ஸ்ரீ பேரருளாள இராமானுஜ ஜீயர் நிர்வகித்து வருகிறார். அப்படியென்றால் இந்த மடம் எப்போது யாரால் நிறுவப்பட்டது என்று நமக்குள் ஒரு கேள்வி எழும் , ஆம் அந்த கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது, இந்த அற்புதமான ஊரில் ஆச்சர்யமாக திகழும் இம்மடத்தை எதிராஜர் என்று அழைக்கப்படும் இராமானுஜரால் நிறுவப்பட்டது. அப்படியானால் இராமானுஜர் இந்த ஸ்தலத்திற்கு எப்படி எழுந்தருளினார்? இந்த கோவிலில் இருக்கும் ஸ்ரீ அழகிய நம்பி அவரை எப்படி ஆலிங்கனம் செய்து அவரை இங்கு கௌரவித்தார்?
என்பதை இராமானுஜர் இந்த ஊருக்கு வந்து பெருமாளுக்கு பெருமை சேர்த்த விதத்தை நாம் தனி பகுதியாக பார்க்கலாம்.
திருஜீயர் மடத்துக்கு எதிரே சுட்டித்தனம் செய்யும் குட்டியானையின் பிளிறல் சத்தம் நம்மை கவர்ந்து இழுக்க விநாயக ரூபமாக திகழும் சுந்தர வள்ளி என்னும் பெயர்கொண்ட ஐந்துமுகத்தனின் ஓயாத விளையாட்டை ரசிக்கத் கண்டு களிக்கலாம்.