Thirukkurungudi Stalapuranam – Part 4
வாமன அவதாரத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதால் இந்த ஊருக்கு வாமன க்ஷேத்ரம், குறுங்கா க்ஷேத்ரம் என்று பல புனைப்பெயர்களும் உள்ளன.
மேலும் குறுகியவனுடைய குடியானதால் “குறுங்குடி” என்று அளிக்கப்படுகிறது.
இந்த திவ்ய ஷேத்திரம் 108 திவ்ய தேசத்தில் 89 வது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு திவ்ய ஷேத்திரத்திலும் பெருமாளாலே ஏற்றம், பிராட்டியாலே ஏற்றம் அல்லது ஆழ்வார் ஆச்சார்யர்களாலே ஏற்றம்.
ஆனால் இந்த திவ்ய ஷேத்திரத்தில்,
- பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சி தருவது ஒரு ஏற்றம்
- இங்கு எழுந்தருளிருக்கும் நம்பியே நம்மாழ்வாராக ஆழ்வார்திருநகரியில் அவதரித்திருக்கிறார் என்பது ஒரு ஏற்றம்
- திருமங்கை மன்னன் என்று அழைக்கப்படும் “திருமங்கையாழ்வார்”க்கு மோக்ஷம் கொடுத்ததால் இந்த ஊருக்கு “கூப்பிடும் தூரத்தில் வைகுந்தம்” என்று பெயர் வந்தது ஒரு ஏற்றம்.
- பாணர் குலத்தில் பிறந்த நம்பாடுவான் என்ற பக்தன் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று பாடிய “கைசிக பண் ” என்ற பாடல்களுக்கு மயங்கி, அவனுக்கும் “சோம சர்மா” என்ற சாபம் பெற்ற ப்ரம்ம ராக்ஷஸனுக்கும் ஜென்ம சாபல்ய மோக்ஷம் அளித்த நாள் “கைசிக ஏகாதசி” என்ற பெயரில் பெருமை பெற்றது ஒரு ஏற்றம்.
- இராமானுஜரை தம் குருவாக ஏற்று அவரிடத்தில் ஒரு சிஷ்யனாக இருந்து அஷ்டாக்ஷர மந்திரமான “ஓம் நமோ நாராயணா” என்று ப்ரம்மோபதேசம் பெற்று “ஸ்ரீவைஷ்ண நம்பி”,”இராமனுஜ நம்பி”,”வடுக நம்பி” என்ற தாஸ்ய நாமத்தையும் பெற்றது ஒரு ஏற்றம்.
– என்று இந்த திவ்ய க்ஷேத்திரத்தின் பெருமைகளை நினைவு கூர்ந்து கோவில் முகப்பின் படிகளில் ஏறி உள்ளே செல்லும் பொழுது இரண்டு பெரிய கதவுகளை நாம் காண நேரிடும். அந்த காலக்கட்டத்தில் எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் இவ்வளவு பெரிய கதவுகளை எப்படி இங்கே அவர்களால் செய்து பொருத்தி இருக்க முடியும் என்று என்ற எண்ணம் நம்மை வியப்பில் ஆழ்த்தி, என்னே அவர்களின் கலைநுட்பம் என்னே அவர்களின் ஞானம் என்று புகழ்ந்து கொண்டே செல்லும் பொழுது நாம் மட்டையடி மண்டபத்தை காணலாம்.