Thirukkurungudi Sthalapuranam – Part 3
திருக்குறுங்குடியில் பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சி தருகிறார்.
- பரம்
- வ்யூஹம்
- விபவம்
- அந்தர்யாமி
- அர்ச்சை
இவைகள் ஐந்து நிலையாகும்.
பரம்
இதில் முதலாவதான பரம் என்பது பரமபதத்தை குறிக்கும்.இந்த பரமபதம் என்பது பகவானின் மூலஸ்தானம். இங்கு ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி சமேதராக பாம்பணையில் அமர்ந்திருப்பார். இங்கு தேவர்கள் முனிவர்கள் என யாவருக்கும் இடம் கிடையாது. பூவுலகில் ஆசார்யன் அனுக்ரஹம் பெற்று வாழ்ந்து முடித்த, ஜீவாத்மாக்கள் மட்டுமே அங்கு பக்தர்களாக பகவான் நாமத்தை சொல்லிக் கொண்டு, விசேஷ உடலோடு பகவத் பஜனையில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இந்த பூவுலகை விட பிரமாண்டமான உலகம். பரமபதம் என்ற இடம்.
வ்யூஹம்
இது திருப்பாற்கடல் என அழைக்கப்படும் பாற்கடலில் பாம்பணையில் பகவான் ஶ்ரீமன் நாராயணன் துயில் கொண்டிருப்பார். “நாகம் ஏறி நடுக்கடலில் துயின்ற நாராயணனே” என்று இவருக்கு நம்மாழ்வாரால் மங்களாசாசனம் உண்டு. ப்ரம்மா, சிவன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் திருமாலை வணங்கி தங்கள் குறைகளை தீர்த்து வைக்க வேண்டி வணங்கி நிற்கும் இடம். லெளகீக பாஷையில் சொன்னால் பகவானின் அலுவலகம். பரமபதம் என்ற இடத்திற்கு பூமியில் பிறந்து ஆசார்யன் அனுக்ரஹம் பெற்ற ஜீவாத்மாக்கள் மட்டுமே போகும் இடம். மற்ற அனைவரும் இங்கு தான் பகவானை சந்திக்க வேண்டும்.
விபவம்
நரசிம்மர், ராமர், போன்ற தசாவதார மூர்த்திகளாக பகவான் அவதார நிலையில் வந்ததுதான் விபவ அவதாரம் ☘️
அந்தர்யாமி
பகவான் ஶ்ரீமன் நாராயணனின் நான்காவது நிலை அந்தர்யாமி. அதாவது ஒவ்வொரு உயிரின் இருதயத்தில், ஒவ்வொரு உயிரினுள்ளும், அமர்ந்திருப்பது தான் அந்தர்யாமி என்று அழைக்கப்படும் நான்காவது நிலை.
பிராமணர்கள் மதியம் மற்றும் இரவு சாப்பாட்டை ஆரம்பிக்கும் முன், பரிசேஷனம் என்று ஒரு கர்மாவை செய்வார்கள். சாப்பாட்டை தண்ணீரால் சுற்றி, மந்திரங்கள் சொல்லிக் கொண்டே, ஆறு பருக்கைகள் சாதத்தை பல் படாமல் வாயினுள் போடுவார்கள். இந்த ஆறு பருக்கைகளும் அந்த பிராமணரின் இருதயத்திற்குள் இருக்கும் “அந்தர்யாமியான பகவானுக்கு” நைவேத்தியம் ஆகும். இதன் பிறகு தான் அவர்கள் சாப்பிட ஆரம்பிப்பார்கள். பிராமணர்கள் இதை சரியாக செயல்படுத்துவதன் மூலம், அனைத்து உயிர்களின் இருதயத்தில் இருக்கும் பகவானுக்கு அந்த நைவேத்தியம் அர்ப்பணம் ஆகிவிடும். இது அந்தர்யாமி நான்காவது நிலை.
அர்ச்சை
அர்ச்சை என்பது தற்போது கோவில்களில் பகவான் இருக்கும் நிலை. இந்த நிலை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பகவான் சயன நிலையில் (படுத்திருக்கும் நிலை), வீற்றிருக்கும் நிலையில் (உட்கார்ந்திருக்கும் நிலை), நின்ற நிலையில் என விதம் விதமாக அருள் பாலிப்பார்.
இந்த மூன்று நிலைகளையும் ஒரே கோவிலுக்குள் நமது திருக்குறுங்குடியில் தரிசிக்கலாம். திருப்பாற்கடல் ஸந்நிதி பிரதான கோவிலுக்கு சற்று தொலைவிலும் மலைநம்பி கோவில் பிரதான கோவிலில் இருந்து 7 கி.மீ தொலைவில் மலைக்கு மேல் நாம் தனியாக ஜீப்பிலோ அல்லது நடந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசித்து கொண்டு கூட செல்லலாம்.