02. திருக்குறுங்குடி கோவிலின் முகத்தோற்றம்

Thirukkurungudi Stalapuranam – Part 2

எங்ஙனேயோ அன்னைமீர்காள்!*  என்னை முனிவது நீர்?*

நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

சங்கினோடும் நேமியோடும்*  தாமரைக் கண்களோடும்*

செங்கனி வாய் ஒன்றினோடும்*  செல்கின்றது என்நெஞ்சமே*.

-நம்மாழ்வார்

என்ற ஆழ்வார் பாசுரத்திற்க்கு இணங்க நம் கால்கள் கோவிலை நோக்கி நகர நம் மனம் பெருமாளை நினைத்து பக்தி பரவசத்துடன் திகைக்க நாம் கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதி தெருவில் நடக்க ஆயத்தமாகிறோம்.

இரண்டு பக்கமும் அழகான வீடுகள், பள்ளிக்கூடங்கள், பள்ளிகளில் குழந்தைகளின் ஆரவாரங்கள், கோவிலை சுற்றி பெரிய ப்ரம்மாண்டமான மதில்கள், கோவிலின் நுழைவாயில் கதவுகள் பெரிய அரண்மனை போன்ற தோற்றத்தையும், வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் பொழுது கோவிலின் கோபுரம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் “கண்டேன் கண்டேன் கண்ணுக்கினிய கண்டேன்” என்பதுபோல இயற்க்கை எழில் சூழ்ந்த ரம்மியமான சூழல் நம் கண்களுக்கு விருந்தாக ரசித்துக்கொண்டே கடந்து கோவிலின் படிக்கட்டுகளில் ஏற தொடங்குமுன், நமக்கு வாமன அவதாரத்தில் மஹாபலி பெருமாளிடம் வரம் கேட்பது நினைவுக்கு வர  மஹாபலி பெருமாளிடம் கேட்கிறார்,

பெருமாளே! கருணையின் வடிவான கடலே, கேட்பதை எல்லாம் கொடுக்கும் கொடை வள்ளலே, எனக்கு தாங்கள் ஒரு வரம் அருள வேண்டும், தாங்கள் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று 5 நிலைகளில் இருக்கிறீர்கள்.

இந்த 5 நிலைகளிலும் இந்த ஊரில் எனக்கு காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார், கருணை கடலான பெருமாள் தனக்கு விருப்பமான பக்தர்கள் எதை கேட்டாலும் கொடுப்பார் அல்லவா, அப்படியே ஆகட்டும்! என்று பகவான் ஶ்ரீமன் நாராயணன் ஐந்து நிலைகளில் காட்சியளிக்கிறார்.