7. நம்பாடுவானிடம் சரணாகதி அடைந்த பிரம்மராக்ஷஸன்

Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 7

ப்ரம்ம ராக்ஷஸன் இருக்குமிடத்தை அடைந்த நம்பாடுவான்,

ஏ ராக்ஷஸனே! இதோ சொன்ன படி நான் வந்து விட்டேன். நான் வழக்கம் போல் கோவிலுக்கு சென்று பக்தியுடன் பாடி, அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமன் நாராயணான ஸ்ரீஅழகிய நம்பி பகவான் திருப்தியடையும்படி பாடி விட்டு வந்து என் ஸத்தியத்தை காப்பாற்றியுள்ளேன். நீயும் உன் இஷ்டம் போல் என்னை புசித்து உன் பசியாற்றிக்கொள்வாயாக.

“ஏ மானிடா! நீ உயிரோடு உனது க்ருஹம் திரும்ப நான் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இப்போது பகவானிடத்தில் பாடி வந்த பாட்டின் புண்ணிய பலனை என்னிடத்தில் சமர்ப்பித்து விட்டு நீ உயிரோடு செல்லலாம்” என்று ப்ரம்ம ராக்ஷஸன் தனக்கே உரித்தான அதிகாரத்தோரணையில் கூற, அதற்கு நம்பாடுவான் மறுத்து,

நான் இங்கு வருவதாக வாக்குறுதி அளித்தேன், வந்து விட்டேன். அதே போல நீயும் என்னை புசிப்பதாக கர்ஜித்தாய், அப்படியே செய் என்று நம்பாடுவான் கூற அதைக்கேட்ட ப்ரம்ம ராக்ஷஸன் திகைத்து நின்றான்.

இருவருக்குமிடையே நடந்த வார்த்தை தர்க்கத்தில் அடுத்து என்ன நடந்தது என்று ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் பூதேவி நாச்சியார்.

” தான் கொடுத்த ஸத்யத்தின்படி வந்துவிட்டதால் தன்னை ஆகாரமாக பட்சித்துக் கொள்ள சொன்னால் அதற்கு நீர் உயிர் பிக்ஷை அளிப்பதாகவும், இன்று பகவான் முன்பே பாடிய பாட்டின் புண்ணியத்தை உமக்கு கொடுத்து விட்டு செல் என்கிறீரே!!!! ” என்று நம்பாடுவான் உரைத்தார்.

அதற்கு ப்ரம்ம ராக்ஷஸன் நம்படுவனிடம் சரணாகதி அடைந்து, பாகவத தேசிகரே! நீர் பகவானிடத்தில் பாடிய பாட்டின் முழு பலனை தராவிட்டாலும், பாதி பலனையோ அல்லது ஒரு பாட்டின் பலனையாவது எனக்கு அர்ப்பணியுங்கள் என்று ப்ரம்ம ராக்ஷஸன் மன்றாடினான். அதற்கும் நம்பாடுவான் மறுத்து விட்டான்.

இவன் ஸத்யத்திற்காக உயிரை கொடுக்க துணிந்துள்ளான். அதே போல உயிரை விட பகவான் முன்பே பாடிய பாட்டின் பலன் மிகவும் உயர்ந்தது என்று புரிந்து கொண்டவன், நம்பாடுவனிடத்தில் சரணாகதி அடைவதை தவிர வேறு சிறந்த வழி ஒன்றுமில்லை என முடிவு செய்த ப்ரம்ம‌ ராக்ஷஸன்,

திடீரென  நம்பாடுவான் காலில் விழுந்து,

பாகவதரே! நான் செய்த பொல்லாங்கையும் பிழைகளையும் ஒன்று நூறாகப் பொறுத்து, ஸ்வாமி அழகிய நம்பியைப் பாடின பலத்திலே கிஞ்சித் மாத்திரமாகிலும் தந்து என்னை ரக்ஷியும் ஐயா! என்னை ஈடேற்றும் ஐயா!பாகவதரே!!!

தேவி! நம்மை சரணடைந்த பக்தர்களை நாம் காப்பது போல், இப்போது தன்னை சரணடைந்த ப்ரம்ம ராக்ஷஸனை காப்பாற்றுவது என்று முடிவு செய்தான் நம்பாடுவான் என்று சொன்ன வராஹ பகவான், அடுத்தடுத்து நடந்ததை தொடர்ந்து சொல்லலானார்.

ப்ரம்ம ராக்ஷஸனே!!! நீர் எப்படி இந்த உருவத்தை அடைந்தாய்? அந்தளவிற்கு என்ன பாவம் செய்தீர்? என்ற நம்பாடுவானிடன் தன் பூர்வ ஜென்ம பாவங்களை கூற தொடங்கினான் ப்ரம்ம ராக்ஷஸன்.

நம்பாடுவானே! இதற்கு முன் பிறவியில் தேவ வம்சத்திலே சரக கோத்ரத்தில், “ஸோம ஷர்மா” என்ற ப்ராம்மண குலத்தில் பிறந்தேன். என் பல தரப்பட்ட நலன்களுக்காக ஒரு பிரமாண்டமான யாகம் நடத்தினேன். அதில் பெரிய தவறு ஏற்பட்டு யாகம் தொடங்கி ஐந்தாவது நாளில் நான் மரணித்து விட்டேன். அந்த யாகத்தை முடிக்காமல் பாதியிலேயே மரணமடைந்ததால் ப்ரம்ம ராக்ஷஸனாக உருவெடுத்தேன். அதனால் இப்போது நீங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று மிகவும் உருக்கமுடன் பதிலளித்த ப்ரம்ம ராக்ஷஸனை காப்பாற்றுவது என்று முடிவு செய்தான் நம்பாடுவான்.