இராமானுஜர் குறுங்கை பயணம்

இராமானுஜரும் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய ப்ரவேஷமும்

இராமானுஜர் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை எல்லா ஊர்களிலும் வ்யாபித்துக் கொண்டு அனைத்து மக்களையும் நல்வழிப்படுத்தி ஸ்ரீமன் நாராயணனின் புகழை அடியார்கள் மனதில் பதியவைத்து திருவனந்தபுரம் என்னும் ஸ்தலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள போத்திமார்கள் ஸ்ரீபத்மநாப ஸ்வாமிக்கு  திருவாராதனம், பூஜைகள் செய்வதை கண்டு அதை மாற்ற வேண்டும் என்று கருதி தன்னுடன் வந்த ஸ்ரீவைஷ்னவர்கள் தான் நாளைமுதல் பூஜைகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை கேட்ட அனைத்து போத்திமார்களும்  இரவு ஸந்நதி மூடும் தருணம்  தாங்களே  பகவானுக்கு பூஜைகள் செய்ய அனுமதி அளிக்க  வேண்டும்  என்று ஸ்ரீபத்மநாபரிடம்  சென்று மனமுருகி ப்ராத்தனை செய்தனர்.  இதை கேட்ட பத்மநாபரோ மனம் இறங்கி அவரின் பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாரிடம் போத்திகளின் விண்ணப்பத்தை கூறி இராமானுஜரை தமது தெற்கு பெரிய வீடு என்று அழைக்கப்படும் “திருக்குறுங்குடி”க்கு சென்று பத்திரமாக சேர்த்து விட்டு வரும்படி கட்டளையிட்டர்.  கருடன் இராமானுஜரை அவர் தூங்கிக் கொண்டிருந்த கட்டிலோடு அப்படியே ஏளப்பண்ணிக்கொண்டு திருக்குறுங்குடி ஊருக்கு வெளியே செல்லும் ஆற்றங்கரையின் ஒரு பாறையில் வைத்து விட்டார். இந்த நிகழ்வின் விளைவாக, அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலில் கருடன் வீற்றிருக்கமாட்டார் என்று நம்பப்படுகிறது.

நம்பி “வடுகநம்பி” யாக உருவெடுத்தல்

மறுநாள் காலை இராமானுஜர் கண் விழித்து பார்த்த போது தான் ஒரு நதிக்கரையின் ஓரத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து சுற்று முற்றிலும் பார்த்தார் . எல்லா இடங்களிலும் சோலைசூழ்தன்  திருக்குறுங்குடி என்ற ஆழ்வார் பாசுரத்திற்கு ஏற்றார் போல்

மலைத்தொடர்கள், செடிகள் என்று பச்சைபசேல் என்று அவர் வியக்கும்படி இரம்மியமாக கண்களுக்கு விருந்தாக இருந்ததை கண்டு மனம் குதுகளித்து எல்லாம் ஸ்ரீமன் நாராயணனின் செயல் என்று தன் மனதில் நாராயணனின் நாமத்தை நினைத்துக் கொண்டு அருகில் இருந்த ஆற்றங்கரையில் நீராடி விட்டு அவருடைய சிஷ்யர்களில் மிகவும் முக்கியமான சிஷ்யனான “வடுகன் “என்று அழைக்கப்படும் சிஷ்யனை கூப்பிட்டார்.,எங்கே வடுகனோ திருவனந்தபுரத்தில் துயில் கொண்டிருக்கிறார் என்பதுகூட தெரியாமல், ஆனால் நம் பெருமாளோ பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தான் உடனே வருவார் அல்லவா, தலைதெறிக்க தாயார் உடன் இருப்பது கூட தெரியாமல் ஓடோடி இராமானுஜரின் சிஷ்யன் “வடுகனாக” உருவெடுத்து குருவிடம் சிஷ்யன் பணிவது போல் “அடியேன்” என்று அவரிடம் வந்து நின்றார். வந்தவரிடம் இராமானுஜர் அவரின் சிஷ்யனாக வந்தது பெருமாள் தான் என்று அறியாமல் தான் உடுத்திக் களைந்த பீதகவாடைகளை நீரில் அலச சொல்ல பெருமாளாக வந்த வடுகனும் இராமானுஜருக்கு ஸேவை செய்தார். அதனால் தான் இராமானுஜர் ஸந்நிதி இருக்கும் இடத்திற்கு “திருப்பரிவட்டப்பாறை” என்று பெயர் வந்தது.

பெருமாளை சிஷ்யனாக ஏற்று திருமந்திர உபதேஸம் செய்தல்

இராமானுஜர் தான் இட்ட திருமண்காப்பை சிஷ்யனுக்கு இட்டு விடுவது வழக்கம்,அதேபோல் சிஷ்யனாக வந்த பெருமாளுக்கு திருமண் காப்பு இட்டு விட்டு கோவிலுக்கு சென்றார்கள் கோவிலின் துவஜஸ்தம்பத்தை (கொடிமரம்) கடந்தவுடன் சிஷ்யனாக வந்த பெருமாள் மறைய இராமானுஜர் மூலவரான ஸ்ரீஅழகிய நம்பியை தரிசிக்க சென்ற போது பெருமாளின் திருமுக மண்டலத்தை தரிசிக்கும் போதுதான் கவனிக்கிறார் , தான் இட்ட திருமண்காப்பு ஈரம் காயாமல் இருப்பதை கண்டு “என்நெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளான பெருமாளின் திருவிளையாடலை எங்ஙனம் அவரிடம் எடுத்துரைப்பேன் என்ற நோக்கில்  மெய்மறந்து பார்க்கும் தருவாயில்,

அர்ச்சகர் மூலமாக ஸ்ரீஅழகிய நம்பி ராமாநுஜரிடம் அழகானதொரு சம்பாஷணை ஆரம்பித்தார். இராமானுஜரே! நீர் எமக்கு திருமண் காப்பு இட்டு விட்டதால் நாம் உமக்கு சீடன் ஆகி விட்டோம். அதனால் எமக்கு திருமந்திர உபதேசம் செய்ய வேண்டும். என்று அவண செய்ய, அதற்க்கு ராமானுஜரோ தாங்கள்  கேட்கும் இடத்தில் கேட்டால் நான் சொல்லும் விதத்தில்  சொல்வேன் என்று பெருமாளிடம் ப்ராத்திக்கிறார் ,உடனே பெருமாள் அர்ச்சகர் மூலமாக இராமானுஜருக்கு சிம்மாசனம் அலங்கரித்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்ய இராமானுஜர் பெருமாளுக்கு “ஓம் நமோ நாராயணா” என்ற  அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து “ஸ்ரீ வைஷ்னவ நம்பி” மற்றும் வடுகனாக வடிவெடுத்ததால் “வடிவழகிய நம்பி” என்ற தாஸ்ய நாமத்தையும் உபதேசித்து இங்கு இராமானுஜர் சார்பாக ஒரு ஜீயர் நிறுவி அதன் மூலம் இங்கு இருக்கும் மக்களுக்கு பெருமாளுக்கு பல தொண்டுகளையும் பெருமாளுக்கு பல கைங்கர்யங்களையும் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை அவர் தொடங்கிய தொண்டுகளை வழிவழியாய் வந்த அணைத்து ஜீயர் ஸ்வாமிகளும் பின்பற்றுகின்றனர்.