Thirukkurungudi Sthalapuranam – Part 1
இந்தியாவின் தென் கோடியில் கன்னியாகுமரிக்கு சுமார் இரண்டு மணி நேரம் முன்னதாக, நெல்லை மாவட்டத்தில், திருநெல்வேலி – கன்னியாகுமரி சாலையில் அமைந்துள்ள வள்ளியூரிலிருந்து களக்காடு செல்லும் சாலையில், வழியெங்கும் மரங்களாக, வளைந்து வளைந்து செல்லும் ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி இனிய பயணம், ஒரு புறம் சிறிய சிறிய ஊர்கள், மறுபுறம் “மகேந்திர கிரி” மலைத்தொடரின் ஒரு பகுதியின் அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி எனும் கிராமம். இந்த மகேந்திரகிரி மலையிலிருந்து தான் ஹனுமான் சீதையை தேடி இலங்கைக்கு பறந்து சென்றார் என்பது விசேஷம்.
நம்பி ஆற்றைக் கடந்து தெற்கு ரதவீதி வழியாகசென்று கோவில் பக்கம் திரும்பும் வழியில் நம்மை பெரிய அழகான தேர் வரவேற்பது போலவே பிரம்மாண்டமாக திகழ்கிறது. இத்தேரில் தான் பெருமாள் பங்குனி மாதம் நடைபெறும் ப்ரம்மோற்ஸவத்தின் 10-ஆம் திருநாள் தாயாருடன் ரதவீதியில் பவனி வருவார்.
தேரை பார்த்துவிட்டு நாம் திரும்புகையில் அதற்கு வலதுபக்கம் உள்ள அழகிய தெப்பக்குளம் என் அழகை பார்த்துவிட்டு செல், என்பது போல் காட்சி அளிக்கும். இந்த தெப்பக்குளத்தில் தை மாதம் பௌர்ணமி அன்று ஸ்ரீ அழகிய நம்பிராயர் மற்றும் திருமலை நம்பிக்கு தெப்போத்ஸவ பவனி என்னும் படகில் கப்பல் கனவான்கள் போல் மூத்தவரும் இளையவரும் அடுத்தடுத்த நாட்களில் பவனி வருவார்கள்.
இந்த தெப்பக் குளக்கரையில் ஸ்ரீ நரசிம்மர் எழுந்தருளியுள்ளார், அவரையும் தரிசித்துவிட்டு திரும்புகையில் கிழக்கே நமக்கு அழகிய “நம்பி ஆறு” காட்சி அளிக்கிறது. இந்த நம்பியாற்றில் ப்ரம்மோற்ஸவத்தின் கடைசி நாளான 11-ஆம் திருநாள் தாயாருடன் தீர்த்தவாரி என்றழைக்கப்படும் திருமஞ்சனம் அரையர் ஸேவையுடன் நடைபெறும். அப்பேற்பட்ட புனிதமான தீர்த்தத்தை நாம் ப்ரோஷித்து அந்த நம்பி ஆற்றின் அழகை ரசித்துவிட்டு அதற்கு நேரெதிரே நாம் ஆவலுடன் தரிசிக்க வந்த ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோயிலின் முகப்பு தோற்றம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நம்கண்முன்னே பெருமாளின் திவ்ய பிரபந்தத்தை நினைவு படுத்தி நம்மை அழைத்து செல்கிறது.